Friday, March 4, 2011

நம்ம கொள்ளு பாட்டனார் 1025 வது சதயவிழா





1025 வது சதய விழா ராஜ ராஜ சோழதேவேந்திரர்
உலகின் 1000 ஆண்டு புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டி பார்சிறக்க ஆட்சி செய்த நமது கொள்ளு பாட்டனார், இந்திரகுல வர்மன், தேவேந்திரகுல சக்கரவர்த்தி, குஞ்சரமல்லன் (என்கிற) மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரரின் 1025 வது சதயவிழாவின் பேரணி 15.11.2010 திங்கள் கிழமை மாலை 4 மணியளவில் தஞ்சை இரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாமள்ளர் இராசராசசோழ தேவேந்திரர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தேவேந்திரர் மறுமலர்ச்சி பேரவை சோழமண்டலம், தமிழ்நாடு தேவேந்திரர் பேரவை, மூவேந்தர் இலக்கிய மன்றம், மள்ளர் இலக்கிய கழகம், மள்ளர் மீட்பு களம், தேவேந்திரர் விழிப்புணர்வு இயக்கம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு, மூவேந்தர் பேரவை மற்றும் பல தேவேந்திர சமூக அமைப்புகள் கலந்து கொண்டனர்

மதுரை அருகே தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் சாலை மறியல்

சுவர் விளம்பரத்தை அழித்த விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் மதுரைக்கு வருவதை வரவேற்று மதுரை மாவட்டம் முண்டநாயகம் என்ற கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், மணிகண்டன், கருப்பசாமி, இளவேனில் ஆகிய 4 பேரும் ராஜாக்கூர் விலக்கில் உள்ள ஒரு சுவற்றில் விளம்பரம் எழுதி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த விளத்தூரை சேர்ந்த ராஜாமணி மற்றும் அவரது நண்பர்கள் விளம்பரம் எழுதி கொண்டிருந்த பாக்கியராஜ் உள்பட 4 பேரையும் சாதி பெயரை சொல்லி திட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயம் அடைந்த பாக்கியராஜ் உள்பட 4 பேரும் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் விளத்தூரை சேர்ந்த ராஜாமணி, தில்லை, ராஜா, மயிலங்குண்டு கணபதி ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், கொடுங்காயம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் ராஜ்குமார் நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இருந்த போதிலும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று(25-01-11) காலை 10.30 மணிக்கு ஒத்தக்கடையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் ராஜ்குமார் தலைமையில் கிழக்கு ஒன்றிய தலைவர் கண்ணன், செயலாளர் சாமிநாதன் முன்னிலையில் இந்த மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், போலீசாருக்கு எதிராக கோசம் எழுப்பினர்.

மறியல் போராட்டம் குறித்து கேள்விப்பட்டதும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டி, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கொடுங்காயம் ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விட்டதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஒத்தக்கடை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் 4 வழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் ஒத்தக்கடை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Thursday, March 3, 2011

தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க கோரிக்கை: கமிசன் அமைக்கப்பட்டது

தேவேந்திர குல வேளாளர் என்ற பிரிவில் 7 உட்பிரிவுகளை இணைப்பது பற்றிய கோரிக்கை குறித்து பரிந்துரைப்பதற்காக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் கமிசனை நியமித்து முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகள், தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும், அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும் என்றும், தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் ம.தங்கராஜ் அளித்த கோரிக்கை, கடையநல்லூர் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் மூலம் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தக் கோரிக்கை குறித்து 26-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் க.அன்பழகன், பொன்முடி, பரிதி இளம்வழுதி, தமிழரசி, மதிவாணன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர், நிதித்துறை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கையை சட்ட ரீதியாக பரிசீலித்து நடைமுறைப்படுத்திட நீதிபதி ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைத்து பரிந்துரை பெறலாம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் சர்ச்சையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை!


சிலைகளுக்கும் தென்மாவட்டங்களுக்கும் ‘ரத்த’ பந்தம் உண்டு என்பது விவரமறிந்த எல்லாருமே அறிந்ததுதான். அந்த வகையில் இப்போது தூத்துக்குடியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது வீரன் சுந்தரலிங்கம் சிலை. வீரன் சுந்தரலிங்கம், கட்டபொம்மனின் தளபதிகளில் ஒருவர். சுதந்திரப் போராட்டத்தில் தற்கொலைப் படை வீரராக மாறி, ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அழித்தது மட்டுமல்லாமல் தன்னையும் நாட்டுக்காக அழித்துக்கொண்டவர்.

தூத்துக்குடி மாவட்டம் காசிலிங்கபுரத்தில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டு, பின் தமிழக அரசால் மூடப்பட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலையை ஜனவரி 16ம் தேதி உத்தரபிரதேச பகுஜன் சமாஜ் எம்.பி., பிரமோத் குரில் திறந்துவைத்தார். மறுநாளே தமிழக அரசு, சிலைக்கு மீண்டும் சீல் வைக்க… வெடித்திருக்கிறது பிரச்சினை.

இதையடுத்து 17ம் தேதி காலையே அங்கு பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டனர். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தா தலைமையிலான அதிகாரிகள் சிலைக்கு மீண்டும் சீல் வைக்க முயன்றபோது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் குபேர பாண்டியன் தலைமையில் திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் உரிமை இயக்க குழு தலைவர் வக்கீல் அதிசயகுமார் உள்ளிட்டோரும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்கனவே திறந்த சிலையை மீண்டும் மூடி சீல் வைத்தனர் அதிகாரிகள். இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலை, முன்பு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மேலும் இது தொடர்பாக பிரமோத் குரில் எம்.பி, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுச்செயலாளர் ஜீவன் குமாரிடம் இதுபற்றி பேசினோம். “தமிழகத்தில் தலித் தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே இருப்பது குறித்து எங்கள் தலைவர் மாயாவதிக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதினோம். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கட்சியின் அமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், திறக்கப்படாமல் உள்ள சிலைகளை திறப்பதற்காகவும் கடந்த 16ம் தேதி தூத்துக்குடிக்கு எம்.பி., பிரமோத் குரில் வருகை தந்தார். அப்போது காசிலிங்கபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரன் சுந்தரலிங்கம் சிலைக்கு ஏற்பட்டுள்ள அவலத்தை அவரிடம் காட்டினோம். அதற்கு அவர், “தனியார் நிலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளை திறக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. இந்தியா முழுவதும் காந்தி, நேரு, இந்திராகாந்தி உள்ளிட்டோர்களின் சிலைகள் பெரும்பாலும் அனுமதி பெறாமல் அரசு நிலத்திலேயே உள்ளது. குறிப்பாக, அதிக இடங்களில் காந்தியின் சிலை அனுமதி பெறாமலேயே உள்ளது ” என்று கூறி, அவரே அந்த பகுதி மக்கள் முன்னிலையில் சிலையை திறந்து வைத்தார். அதன் மேல் உள்ள தூசிகளை துடைத்து சிலைக்கு மாலையும் அணிவித்தார்.

இதையடுத்து அவர் மேல் வழக்கு போட்டிருக்கிறது போலீஸ். ராஜ்யசபா எம்.பி.யான பிரமோத்குரில் மீது வழக்கு தொடரவேண்டுமானால் நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். இதையெல்லாம் பின்பற்றவில்லை போலீஸ். இதன் மூலம் இந்த பிரச்சினையை இந்திய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் எம்.பி.யான பிரமோத் குரில் வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வீரன் சுந்தரலிங்கத்துக்கு நாடாளுமன்ற வளாகத்திலேயே சிலைவைக்க வேண்டுமென்று பேசவுள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக உள்ள டாக்டர் அம்பேத்கர், வீரன் சுந்தரலிங்கம், தியாகி இமானுவேல் சேகரன் உள்ளிட்டவர்களின் சிலைகள் இன்னும் தமிழகத்தில் ஏராளமாக திறக்கப்படாமல் உள்ளன. அவற்றை அரசு உடனே திறக்க வேண்டும். இல்லையெனில் பிரமோத் குரில் மீண்டும் வந்து திறக்காமல் உள்ள அனைத்து சிலைகளையும் திறந்து வைப்பார்” என்றார் ஆவேசமாக.

போராட்டத்தில் கலந்து கொண்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் குபேர பாண்டியனிடம் பேசினோம். “5 வருடத்திற்கு முன்பு நிறுவப்பட்ட சிலைக்கு அனுமதி இல்லை என்று தி.மு.க. அரசு சீல் வைத்தது. இதற்காக பலமுறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 2009ல் நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலின் போது இந்த பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த துணை முதல்வருக்கு இது தொடர்பாக கறுப்புக்கொடி காட்டினோம். அதையடுத்து, ‘தற்சமயம் தேர்தல் நடக்க உள்ளதால் இந்த சிலையை திறக்க முடியாது. தேர்தல் முடிந்தவுடன் நானே வந்து சிலையை திறந்து வைக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். ஆனால், ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற பிறகு எங்களை மறந்து விட்டார். ஆனால், இப்போது திறந்த சிலையை தமிழக அரசு மீண்டும் மூடி சீல் வைத்தது தேவேந்திரகுல மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்திரகுல மக்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்ற தி.மு.க. அரசு எங்களை திட்டமிட்டே புறக்கணிக்கிறது. இதற்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவோம்” என்றார்.

பிரச்னைக் குறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் வசந்தாவிடம் பேசினோம். “குறிப்பிட்ட அந்த தனியார் இடத்தில் வெண்கலத்தில் சுந்தரலிங்கம் சிலை அமைக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். அது நிலுவையில் உள்ள நிலையில்… அனுமதி இன்றி சிமென்ட் சிலையை திறந்துவிட்டனர். எனவே சிலையை ஏற்கனவே இருந்த நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம்” என்றார்.

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கான வழிமுறைகளாக மாறும் சிலைகள்… மற்ற நேரத்தில் அரசு எந்திரத்துக்கு வெண்கலமாகவும், சிமென்ட்டாகவும் தெரிவது வியப்பான வேதனை!

நன்றி: தமிழக அரசியல்

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!




நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறிய விழாவாகவும் நடைபெறுவதுண்டு. இந்த முதல் நாள் வெளியீட்டின் போது இதற்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட கடித உறையில் இத் தபால்தலை ஒட்டப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குரிய நாள் முத்திரையும் பதிக்கப்பட்டு முதல்நாள் உறையாக FDC- First Day Cover விற்கப்படும்.

இதைப்போல் தான் இந்தியாவில் சுதந்திரம் அடைந்தபின் 2200க்கும் மேற்பட்ட ஞாபகார்த்த தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு தபால்தலை வெளியிடப்படும்போதும், குறிப்பாக தியாகிகளுடைய அல்லது தலைவர்களுடைய தபால் தலை வெளியிடும் போது, அவர்களுடைய சம்பந்தப்பட்ட ஊரிலோ அல்லது மாநிலத்திலோ, அவர்களின் பிறந்த நாளிலோ அல்லது நினைவு நாளிலோ பெரிய விழா எடுத்து மத்திய மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எல்.எல்.ஏ.க்கள் முன்னிலையிலேயே இந்த தபால் தலை வெளியிடப்படும். அந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட தலைவர் அல்லது தியாகிகளின் குடும்பத்தினரை அழைத்து கௌரவிப்பார்கள். ஆனால் ஒன்றரை கோடி தேவேந்திரர்களின் மதிப்புமிக்க தலைவராக கருதப்படும் தியாகி இமானுவேல் சேகரனார் தபால் தலையை மேலே சொன்ன எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் நேரடியாக விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தியாகி இமானுவேல் சேகரனாருக்கு செய்த மிகபெரிய அவமரியாதை.

தற்போது முன்னெப்போதுமில்லாத அதிகளவு மத்திய அமைச்சர்களை கொண்டிருக்கிற திமுக மற்றும் காங்கிரசின் தேவேந்திரர் விரோத போக்கையே இது காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் காங்கிரசும் இந்த கூட்டுச் சதியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

இதைவிட கொடுமை பல்லாயிரக் கணக்கான தபால் தலைகளை வெளியிட்ட நாள், அந்த தபால் தலையின் புகைப்படம், அதன் விவரம்(Broucher) இவை மூன்றையும் ஆண்டு வாரியாக வரிசைப்படுத்தி வைத்திருக்கின்ற http://www.indiapost.gov.in/ என்ற அரசு தபால்துறை இணையதளத்தில் கூட இந்த தபால்தலை வெளியிடப்பட்ட செய்தியை மறைத்திருக்கிறார்கள். ஆனால் http://stampsofindia.com/ போன்ற தபால்தலை சேகரிப்பாளர் சேவை இணையதளங்களில் இதைப்பற்றிய முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு FDC என்று சொல்லப்படுகின்ற முதல்நாள் உறை, அதாவது தபால் துறையே தியாகி இமானுவேல் சேகரனார் படம் போட்ட ஒரு தபால் உறையில், இமானுவேல் தபால் தலை ஒட்டி, அதிலே அரசு தபால் நிலைய முத்திரையும் இட்டு விற்பனை செய்துள்ளனர். அந்த கவர் படங்கள் கூட தனியார் இணையதளங்களில் உள்ளது.

மற்றும் ஒவ்வொரு தபால் தலை வெளியிடப்படும் பொழுதும் அதன் இணைப்பாக ரூபாய் 2க்கு வெளியிடப்படும் பிரௌச்சர் என்று சொல்லக்கூடிய அந்த தபால்தலையைப் பற்றிய விளக்க கையேடும் நேரடியாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனுடைய புகைப்படமும் தனியார் இணையதளங்களில் காணக் கிடைக்கின்றன.

அப்படியானால் திட்டமிட்டு தியாகி இமானுவேல் சேகரனாருக்கு வெளியிடப்பட்ட தபால் தலையை மறைத்த தமிழ்நாட்டு அரசியல் தலைவர் யார்?

இந்த தபால் தலை வெளியிடப்பட்ட போது, அத்துறையின் அமைச்சர் கலைஞர் பாணியில் சொன்னால் ஒரு தலித். ஆனால் அவரும் சேர்ந்து கலைஞரின் ஆலோசனைப்படி, ப.சிதம்பரத்தின் வேண்டுகோளின்படி மற்றும் ஆதிக்க சாதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வேண்டுகோளின் படி, திருமாவளவனின் வேண்டுகோளின்படியும் இந்த சதித்திட்டம் நிறைவேறியுள்ளது. தேவேந்திரர்களின் வரலாறுகளை தொடர்ந்து மறுத்து வரும் கலைஞரும் அவரது கூட்டமும் மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்திருக்கிறது.

இமானுவேல் சேகரனாரின் தபால் தலை வெளியிடப்பட வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் தேவேந்திரர்கள் கலைஞருக்கு எதிராக ஒன்றுதிரண்டார்கள் என்ற காரணத்திற்காகவே இது நடந்திருக்கக் கூடும்.

1. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை சந்தித்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைத்தது.

2. உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களை அநியாயமாக பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தேவேந்திரர்கள் ஒன்று திரண்டு போராடியது

3. மதுரை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும் என்று பெரிய அளவில் போராட்டங்கள் எழுந்தது போன்ற காரணங்களை வைத்து எப்படியும் தேவேந்திரர்கள், வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைத்தே கலைஞர் இந்த தேவேந்திரர் விரோதச் செயலலை செய்திருக்கிறார்.

துரோகத்தின் விளைநிலம் கருணாநிதிக்கும், துணை நின்ற காங்கிரசுக்கும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு இதைவிட மிகப்பெரிய காரணம் தேவையில்லை. சிந்திப்பீர் தேவேந்திரர்களே!…

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!
மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா எடுப்பதுடன், தபால் தலை வெளியிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்.

* தேவேந்திர குல மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

* சென்னை மெரீனா கடற்கரையில் வீரன் சுந்தரலிங்கம் உருவச்சிலையை நிறுவ வேண்டும்.

* மறைந்த மூதறிஞர் தேவ ஆசீர்வாதத்தின் நூல்களை நாட்டுடமையாக்கி தஞ்சையில் அவர் வாழ்ந்த வீட்டை மணிமண்டபமாக மாற்ற வேண்டும்.

* தமிழக மக்களின் சம்மதமின்றி இந்திய அரசால் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பன்னாட்டு முதலாளிகளுக்கு தமிழகத்தின் நீண்ட கடற்கரையைத் தாரை வார்க்க வழிவகுக்கும் இந்திய கடற்கரை மேலாண்மைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் அ.திருநாவுக்கரசு தலைமை வகித்தார். மாநில செய்தித்தொடர்பாளர் டென்னீஸ், மாவட்ட இளைஞரணிச் செயலர் சி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு முத்தரையர் சங்கத் தலைவர் குழ.செல்லையா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். கட்சியின் நிறுவனத்தலைவர் வழக்குரைஞர் புரட்சிக்கவிதாசன் மாநாட்டு பேருரையாற்றினார்.

முன்னதாக நடைபெற்ற பேரணியை மாநில இளைஞரணிச் செயலர் திருச்சி ஆர்.பெரியசாமி தொடக்கிவைத்தார். இதையடுத்து நடைபெற்ற கருத்தரங்கில், அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் குருசாமிசித்தர் பாராட்டப்பட்டார். முன்னதாக, மாவட்ட இணைச் செயலர் சி. ரவி வரவேற்றார். தொழிலதிபர் எஸ்.கே.ரவி நன்றி கூறினார்.

ஜான் பாண்டியன் போட்டோ